சினிமா விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் 

  • நடிகர்கள்:
  • சந்தானம்,சுரபி,முனீஷ்காந்த்
  • இயக்கம்: எஸ் பிரேம் ஆனந்த்
  • சினிமா வகை:Comedy, Horror
  • கால அளவு:2 Hrs 5 Min

பக்கா ஹாரர் காமெடி படமாக வந்திருக்கிறது டிடி ரிட்டர்ன்ஸ். நம்மை சிரிக்க வைத்திருப்பது தான் படத்தின் வெற்றியே.

ஜெயிக்கணும் இல்லை என்றால் ஓடிவிடணும் எனும் ஆபத்தான விளையாட்டை முதல் காட்சியிலேயே காட்டுகிறார்கள். அந்த விளையாட்டில் தோல்வி அடைபவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த ஆபத்தான விளையாட்டை நடத்தும் குடும்பத்தை கிராமத்தினர் கொலை செய்துவிடுகிறார்கள். அந்த நபர்கள் தாங்கள் இருந்த பங்களாவில் பேயாக அலைகிறார்கள்.

ஒரு பிரச்சனையில் சிக்கிய தன் காதலியை (சுரபி) காப்பாற்றத் துடிக்கும் இவென்ட் மேனேஜர் சதீஷை(சந்தானம்) அறிமுகம் செய்து வைக்கிறார்கள். காதலியை காப்பாற்ற பெரிய தொகைக்கு ஏற்பாடு செய்கிறார் சதீஷ். ஆனால் அது பயங்கரமான தொழில் அதிபரிடம் இருந்து திருடப்பட்ட பணம் என்பது பின்னர் தெரிய வருகிறது.

அதன் பிறகு நடக்கும் சம்பவத்தால் சதீஷும், அவரின் குழுவும் பேய் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய்களால் ஆபத்தான விளையாட்டை விளையாட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சதீஷும், அவரின் காதலியும் ஆபத்தான விளையாட்டில் ஜெயிலித்து, பேய்களிடம் இருந்து தப்பிப்பார்களா என்பதே கதை.

ஹாரர் காமெடி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது டிடி ரிட்டர்னஸ். முதல் 20 நிமிடங்களில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அய்யய்யோ இந்த படமும் சோதிக்குமோ என நினைத்தால் நம்மை கவர்ந்து சிரிக்க வைத்துவிட்டார் இயக்குநர் பிரேம் ஆனந்த். கடைசி வரை அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதி பயங்கர விறுவிறுப்பாக செல்கிறது. ஜெயிக்கணும் இல்லை என்றால் ஓடிவிடணும் விளையாட்டில் நான்கு லெவல்கள் இருக்கிறது. ஒவ்வொரு லெவலிலும் ஒரு வித்தியாசமான டாஸ்க் இருக்கிறது. அதை எல்லாம் பார்த்து பார்த்து சிரிக்கும்படி உள்ளது.

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சந்தானம். தன் ஒன்லைனர்களால் தியேட்டரில் இருப்பவர்களை சிரிக்க வைக்கிறார். சுரபி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராவத், முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பை குறை சொல்ல முடியாது. கதை நகர நகர மாசூம் ஷங்கரின் கதாபாத்திரம் முக்கியமானதாக மாறுகிறது. அவர் நன்றாக நடித்திருக்கிறார்.

முதல் சில நிமிடங்களை தவிர படம் முழுக்க ஒரே சிரிப்பு தான்.

டிடி ரிட்டர்ன்ஸ்- நம்பி பார்க்கலாம்.

  • Be the first to comment

Back to top button