கிசு கிசு

அண்ணாமலை நடித்த அரபி படம் ட்ரெய்லர்… இணையத்தை கலக்கி வருகிறது..!!

சென்னை, வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் ‘அரபி’.

இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் நீண்ட தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் நடித்து மக்களிடையே நன்கு பிரபலமானவர்கள் பிற்காலத்தில் அரசியலிலும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தனர். கலை சார்ந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், சீமான், கமல்ஹாசன், விஜய் என அடுத்தடுத்து பலரும் அரசியலில் வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படியான நிலையில் சமீபத்தில் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அரிசி என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சினிமாவில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் ஸ்ரீ விஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சி.எஸ். தயாரித்துள்ள படம் ‘அரபி’. இப்படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையாக இருக்க முடியாது. இதனை நிரூபித்து தேசிய அளவில் பெயர் எடுத்த விஸ்வாஸ் என்ற இளைஞனின் உண்மை கதை தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் தன் பெற்றோர் மட்டுமல்லாமல் தன் இரு கைகளையும் இழந்த விஸ்வாஸ் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுகிறார். இந்த படத்தில் ஹீரோவை உற்சாகப்படுத்தும் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடிக்கிறார்.

அரபி படத்துக்கு கம்பட ரங்கய்யா இசையமைத்த நிலையில் ஆனந்த் திண்ட்வாரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது அரபிக்கடல் மற்றும் உடுப்பி பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அரபி பட இயக்குநர் ராஜ்குமார் பேசியதாவது, ‘ஒரு நிகழ்ச்சியில் விஸ்வாஸை சந்தித்தேன். அவரின் கதையை கேட்ட பின் ஏன் அவரை வைத்து படம் பண்ணக்கூடாது என நினைத்தோம். இப்படத்தில் அண்ணாமலையை நடிக்க முடிவு செய்தோம். அவரும் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்தார். அரபி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது’ என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணாமலை கேமியோர் ரோலில் நடித்துள்ள படம் தமிழிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தங்கள் மாநில தலைவர் நடித்த படத்தை காண பாஜக தொண்டர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்…

Related Articles

  • Be the first to comment

Back to top button